செய்திகள்
களரம்பட்டி பெரிய ஏரி நிரம்பியதால் சுற்றுலா தலம் போல் பொதுமக்கள் அங்கு திரண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

16 ஆண்டுகளுக்கு பிறகு களரம்பட்டி ஏரி நிரம்பியதால் பட்டாசு வெடித்து, கிடா வெட்டி கொண்டாட்டம்

Published On 2021-11-30 09:16 IST   |   Update On 2021-11-30 09:16:00 IST
பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கே பச்சைமலை அடிவாரத்தில் உள்ள களரம்பட்டி பெரிய ஏரி 16 ஆண்டுகளுக்குப்பிறகு நேற்று இரவு தனது முழு கொள்ளளவை எட்டியதால், தண்ணீர் நிரம்பி வழிய தொடங்கியது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத மழை பெய்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆண்டு சராசரி மழை அளவான 861 மி.மீட்டரை தாண்டி, 1289.27 மி.மீ. மழை பெய்துள்ளது.

இதனால் வறண்டு கிடந்த ஏரி, குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன்படி, இதில் பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கே பச்சைமலை அடிவாரத்தில் உள்ள களரம்பட்டி பெரிய ஏரி 16 ஆண்டுகளுக்குப்பிறகு நேற்று இரவு தனது முழு கொள்ளளவை எட்டியதால், தண்ணீர் நிரம்பி வழிய தொடங்கியது.

இதையடுத்து, அந்த ஏரியில் இருந்து பாசன வசதி பெறும் களரம்பட்டி, அம்மா பாளையம் ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏரி நிரம்பி வழிவதை திருவிழா போன்று கொண்டாட முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தனர்.

தண்ணீர் வரத்தை எதிர்பார்த்து காத்திருந்த 2 கிராம மக்கள், விவசாயிகள் 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிரம்பி வழிந்ததால், மேளதாளங்களுடன் சென்று, குருக்களை வரவழைத்து பூஜை செய்து தண்ணீரை உற்சாகமாக வரவேற்றனர்.

முன்னதாக களரம்பட்டி ஊராட்சித் தலைவர்கள் தலைமையில், தாரை தப்பட்டை முழங்க, அப்பகுதி பொதுமக்கள் ஏரி அருகே ஒன்று கூடினர். பின்னர், ஏரியில் மலர்கள் தூவி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

இதைத்தொடர்ந்து அம்மாபாளையம் கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் கிடா வெட்டி பொங்கலிட்டு சாமிக்கு படையலிட்டு கொண்டாடினர்.

கடந்த 2005-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது கனமழையின் காரணமாக களரம்பட்டி ஏரியில் நீர் நிரம்பி வருவதை வரவேற்று மிகுந்த மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்து, அதிர் வேட்டுகள் முழங்கிட ஆனந்தத்துடன் ஆடிப்பாடி, குத்தாட்டம் போட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில், இதுவரை 65 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளன. அதன்படி, அரும்பாவூர், கீழப்பெரம்பலூர், வடக்கலூர், நூத்தப்பூர், வெண்பாவூர், வயலப்பாடி, அரும்பாவூர், அரசலூர், மேலப்புலியூர், வடக்களூர் அக்ரஹாரம், அய்யலூர், வரகுபாடி, வெங்கலம், கீரனூர், பெருமத்தூர், வி.களத்தூர், குரும்பலூர்,

கை.பெரம்பலூர், வயலூர், கிழுமத்தூர், அகரம் சிகூர், லாடபுரம், பேரையூர், சாத்தனவாடி, நெய்க்குப்பை, கீழவாடி, தழு தாழை, துறைமங்கலம், பூலாம்பாடி, வெங்கலம், செஞ்சேரி, தேனூர், பெரம்பலூர், சிறுவாச்சூர், பெரியம்மாபாளையம், கிளியூர், ஆய்க்குடி, தொண்டமாந்துறை, காரியனூர், வெங்கனூர், அன்னமங்கலம், ஆண்டிக் குரும்பலூர், கை.களத்தூர், எழுமூர்,

புது நடுவலூர், தொண்டப்பாடி, லாடபுரம், களரம்பட்டி, நாரணமங்கலம், செங்குணம், திருவாளந்துறை, கீழப்புலியூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள 65 ஏரிகள் நிரம்பி வழிகின்றன. மேலும், எஞ்சியுள்ள 2 ஏரிகள் 90 சதவீதமும், 4 ஏரிகள் 80 சதவீதமும், 2 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன.

Similar News