செய்திகள்
தற்கொலை

பெற்றோர்கள் எதிர்ப்பு- ஒரே நேரத்தில் தற்கொலை செய்த பள்ளி காதலர்கள்

Published On 2021-11-24 09:34 IST   |   Update On 2021-11-24 09:34:00 IST
கள்ளக்குறிச்சி அருகே பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே உள்ள குதிரைசந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் நிவேதா (வயது 16). இவர் குதிரைசந்தல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

கடந்த 20-ந்தேதி கடைக்கு சென்ற நிவேதா திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் கச்சிராயபாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து நிவேதாவை தேடி வந்தனர். எங்கு தேடியும் நிவேதா கிடைக்கவில்லை.

இதற்கிடையே நேற்று கள்ளக்குறிச்சி அருகே சோமண்டார்குடி கோமுகி ஆற்றில் மாணவி ஒருவர் பிணமாக மிதந்தார். இதுபற்றி அக்கம் பக்கம் உள்ளவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆற்றில் மிதந்தது காணாமல்போன மாணவி நிவேதா என தெரியவந்தது. இதுபற்றி பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் இதனை உறுதி செய்தனர்.

இதற்கிடையில் அதே பகுதியில் உள்ள வேப்பமரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இது பற்றி அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் தூக்கில் பிணமாக தொங்கியவர் குதிரைசந்தல் கிராமத்தை சேர்ந்த குழந்தைவேல் மகன் அரிகிருஷ்ணன் (16) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து நடந்த விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்தது. தற்கொலை செய்து கொண்ட மாணவி நிவேதாவும், அரிகிருஷ்ணனும் ஒரே வகுப்பில் படித்துள்ளனர். அப்போது அவர்களுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் வேவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். எனவே இந்த காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனவே கடந்த 20-ந்தேதி 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். காதலில் ஒன்று சேர முடியாததால் 2 பேரும் தற்கொலை செய்து கொண்டனர். மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News