செய்திகள்
குப்பனூர் சாலையில் மண்சரிவு ஏற்பட்டிருப்பதை காணலாம்

தொடர் மழையால் ஏற்காடு மலைப்பாதையில் 7 இடங்களில் மண் சரிவு

Published On 2021-11-19 12:08 IST   |   Update On 2021-11-19 12:08:00 IST
தொடர் மழை மற்றும் மண்சரிவால் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.
ஏற்காடு:

ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்துவருகிறது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சேலம்-ஏற்காடு மலைப்பாதை, குப்பனூர் மலைச்சாலை ஆகிய 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. கடந்த வாரம் மலைப்பாதையில் ராட்சத பாறை உருண்டு விழுந்தது. இதனால் ஏற்காட்டுக்கு வாகன போக்குவரத்து தடைபட்டது. அதிகாரிகள் விரைந்து வந்து மலைப்பாதையை சரி செய்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து நள்ளிரவு வரை ஏற்காட்டில் கன மழை கொட்டியது. இதனால் ஏற்காட்டில் இருந்து குப்பனூர் செல்லும் சாலையில் 7 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

சாலை ஓரங்களில் மண், மற்றும் சிறு பாறைகள் உருண்டு விழுந்துள்ளது. இதனால் அவ்வழியாக வாகனங்களில் செல்ல பொதுமக்கள் அச்சமடைகின்றனர். மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் மணல் மூட்டைகளை அடுக்கி மேலும் மண் சரிவு ஏற்படாத வண்ணம் பணி செய்யப்படுவதாக நெடுஞ்சாலை துறையினர் கூறினர். தொடர் மழை மற்றும் மண்சரிவால் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதனால் எப்போதும் சுற்றுலா பயணிகள் நிறைந்து பரபரப்பாக காணப்படும் ஏற்காடு ஒண்டிகடை பகுதி, அண்ணா பூங்கா ஏரி பூங்கா, மற்றும் படகு இல்ல பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகளை நம்பி உள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்தால்

மலை பாதையில் மேலும் சில இடங்களில் மண்சரிவு ஏற்ப்பட வாய்ப்புள்ளது. தொடர் மழையால் காப்பி விவசாய தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.




Tags:    

Similar News