செய்திகள்
மழை

கொட்டி தீர்த்த கனமழை: கோவையில் 21 குளங்கள் நிரம்பின

Published On 2021-11-02 09:44 IST   |   Update On 2021-11-02 09:44:00 IST
தொடர் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததை அடுத்து, தண்ணீர் நொய்யல் வழித்தடங்களில் உள்ள 25 குளங்களுக்கு திருப்பி விடப்பட்டது.
கோவை:

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் மற்றும் மாலை நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு வானத்தில் கருமேக கூட்டங்கள் திரண்டு மழை பெய்வது போல் காட்சியளித்தது.

இரவில் ராமநாதபுரம், கணபதி, பீளமேடு, சிவானந்தா காலனி, சுங்கம், ரேஸ் கோர்ஸ், காந்திபுரம், செல்வபுரம், கவுண்டம்பாளையம், சரவணம்பட்டி, தண்ணீர்பந்தல், சேரன் மாநகர், சுந்தராபுரம் உள்பட நகரின் பல இடங்களிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விடாமல் மழை பெய்து கொண்டே இருந்தது.

இதனால் முக்கிய சாலைகளான அவினாசி சாலை, திருச்சி சாலை, ரெயில் நிலைய அரசு மருத்துவமனை பஸ் நிறுத்தம், ராமநாதபுரம் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு இடையே வாகனத்தை ஓட்டி சென்றனர்.

புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை, சூலூர், கருமத்தம்பட்டி போன்ற பகுதிகளில் மழை பெய்தது.

தொடர் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததை அடுத்து, தண்ணீர் நொய்யல் வழித்தடங்களில் உள்ள 25 குளங்களுக்கு திருப்பி விடப்பட்டது.

தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருப்பதால் குளங்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து குளங்கள் நிரம்பி வருகின்றன. தற்போது வரை குறிச்சி, சிங்காநல்லூர், உக்குளம், கோலரம்பதி, நரசம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி செல்வ சிந்தாமணி குளம் சிங்காநல்லூர் குளம் சொட்டையான்டி குளம் உள்பட 21 குளங்கள் முழுவதுமாக நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் மற்ற குளங்களும் விரைவில் நிரம்பி விடும்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான வெலிங்டன், அருவங்காடு, பர்லியார். வண்டிச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் இரவு கனமழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து இன்று காலையும் பெய்து வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

இந்த மழைக்கு இன்று அதிகாலை வெலிங்டன் பகுதியில் மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.

தொடர் மழையால் குன்னூர் பஸ் நிலையம், மார்க்கெட் பகுதிகளில் உள்ள சாலைகள் தண்ணீர் தேங்கியது. இதனால் மார்க்கெட்டிற்கு வந்தவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.

கோத்தகிரி, ஊட்டி, பந்தலூர், கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

கோவை தெற்கு-52, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்-51, சூலூர்-35, பொள்ளாச்சி-35, மேட்டுப்பாளையம்-29, விமான நிலையம்-26 சின்னக்கல்லார்-19, சோலையார்-10, ஆழியார்-11. 
Tags:    

Similar News