செய்திகள்
டிரைவர்

சாலையில் உயிருக்கு போராடிய டிரைவரை காப்பாற்றிய போலீசார்- பொதுமக்கள் பாராட்டு

Published On 2021-05-29 10:56 IST   |   Update On 2021-05-29 10:56:00 IST
ஓட்டுநரின் உயிரை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர் சத்யமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் மரைக்காயர் ஆகியோருக்கு பொதுமக்கள் மற்றும் போலீசார் வட்டாரத்திலும் பாராட்டி வருகின்றனர்.
கூடலூர்:

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளாவுக்கு ஒரு மினி லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது கூடலூர்- கேரளா எல்லையான கீழ்நாடுகாணி அருகே 2-வது வளைவு சாலையில் வந்த போது திடீரென மினிலாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் மினி லாரியை ஓட்டிய பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை பகுதியை சேர்ந்த அபிலாஷ் என்பவர் சுய நினைவை இழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலையில் சரக்கு வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. அப்போது நீலகிரி மாவட்ட கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யமூர்த்தி மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் மரைக்காயர் ஆகியோர் ரோந்துப் பணி மேற்கொண்டனர். விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்து கிடந்த டிரைவர் அபிலாஷை கண்டனர்.

உடனடியாக ஜீப்பை நிறுத்தி டிரைவர் அபிலாஷை பரிசோதித்தனர். அப்போது அவரின் சுவாசம் மிகவும் குறைவாக இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் துரிதமாக செயல்பட்டு டிரைவரின் மார்பில் சி.பி.ஆர். என்னும் முறையால் கைகளால் அழுத்தம் கொடுத்தனர். தொடர்ந்து முயற்சி செய்ததன் விளைவாக சிறிது நேரத்தில் டிரைவர் அபிலாஷ் சுய நினைவு திரும்பி கண்ணை திறந்தார்.

பின்னர் கேரளா மாநிலத்திலுள்ள பூக்கோட்டுப்பாடம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு கேரள போலீசார் ஆம்புலன்சுடன் விரைந்து வந்து டிரைவர் அபிலாஷை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். உயிர் காப்பு முறையை விரைவாக கையாண்டு ஓட்டுநரின் உயிர்காத்த வீடியோ தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஓட்டுநரின் உயிரை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர் சத்யமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் மரைக்காயர் ஆகியோருக்கு பொதுமக்கள் மற்றும் போலீசார் வட்டாரத்திலும் பாராட்டி வருகின்றனர்.

Similar News