செய்திகள்
கொரோனா வைரஸ்

ஓசூரில் வேகமாக பரவுகிறது- 42 வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று

Published On 2021-04-14 06:45 GMT   |   Update On 2021-04-14 06:45 GMT
ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி யிருந்து வேலை பார்த்து வருகின்றனர்.

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் பாதித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 58 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 64 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரத்து 330 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சையில் குணமடைந்து 8 ஆயிரத்து 547 பேர் வீடு திரும்பி உள்ளனர். தற்போது 664 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 119 ஆக உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 58 பேரில் 42 பேர் மட்டும் ஓசூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி யிருந்து வேலை பார்த்து வருகின்றனர்.

குறிப்பாக ஓசூரில் தனியார் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மத்தியில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தொழில் சாலைகளில் வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்தும் ஏராளமானோர் வேலைக்கு ஓசூருக்கு வந்து செல்கின்றனர். இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக ஓசூர் பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது.

ஓசூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் வருமாறு:-

ஓசூர் ஜூஜூவாடி சக்தி வேல் நகர்-1, நல்லூர்-1, ஓசூர்-18, அச்செட்டிப்பள்ளி-1, தின்னூர்-1, கெலமங்கலம்-1, வசந்த் நகர்-1, மூக்கண்டப்பள்ளி-3, ராயக்கோட்டை அட்கோ-2 மற்றும் சூளகிரி-2, குருப்பட்டி-1, நாகமங்கலம்-1, ஊத்தங்கரை-2, பர்கூர்-1, போச்சம்பள்ளி-1 என மொத்தம் 58 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஓசூரை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனையை சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News