செய்திகள்
மரணம்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து- மேலும் 2 தொழிலாளர்கள் பலி

Published On 2021-03-14 04:38 GMT   |   Update On 2021-03-14 04:38 GMT
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மேலும் 2 தொழிலாளர்கள் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:

விருதுநகர்-சிவகாசி செல்லும் சாலையில் ஆமத்தூர் அருகே குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் பட்டாசு ஆலை உள்ளது.

இங்கு கலர் மத்தாப்புகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சிவாசியை சேர்ந்த விசாகன் என்பவருக்கு சொந்தமான இந்த ஆலையில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று மாலை மத்தாப்பு தீக்குச்சிகளை காய வைப்பதற்காக தொழிலாளர்கள் அதனை அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கருமருந்து உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். தீ விபத்துபற்றி அறிந்ததும் தீயணைப்பு விரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த வெடி விபத்தில் 2 அறைகள் தீப்பிடித்து எரிந்து சேதமாயின.

இதில் வீராசாமி (வயது 64), புதுராஜா (54), நடராஜன் (50) மற்றும் முருகேசன் மனைவி பஞ்சவர்ணம் (54) ஆகிய 4 பேரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். உடல் கருகிய நிலையில் அவர்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் புதுராஜா இறந்தார்.

மேலும் வீராசாமி, நடராஜன் ஆகியோரும் அடுத்தடுத்து சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. பஞ்ச வர்ணத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆமத்தூர் போலீசார் ஆலை உரிமையாளர் விசாகன் மற்றும் போர்மேன் துரைராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் துரைராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News