செய்திகள்
கோடியக்கரை சரணாலயத்தில் லட்சக்கணக்கில் குவிந்துள்ள கொசு உள்ளான் பறவைகளை காணலாம்

கோடியக்கரை சரணாலயத்தில் இருந்து சொந்த நாட்டுக்கு செல்ல தயாராகும் பறவைகள்

Published On 2021-02-17 09:54 IST   |   Update On 2021-02-17 09:54:00 IST
கோடியக்கரை சரணாலயத்தில் இருந்து சொந்த நாட்டுக்கு புறப்பட்டு செல்ல பறவைகள் தயாராகின்றன.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அங்கு நிலவும் குளிரை போக்க இங்கு பறவைகள் வருவது வழக்கம்.

ரஷ்யா, சைபீரியா, இலங்கை பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து 247-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பறவைகள் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை இங்கு வந்து தங்கி செல்வது வழக்கம் ஆகும்.

இந்த ஆண்டு கோடியக்கரையில் பருவமழை அதிக அளவு பெய்து மழை நீர் அதிகமாக தேங்கி உள்ளதால், ரஷ்யாவில் இருந்து வந்துள்ள பூநாரை உள்பட 47 வகையான சிறை வகைகள், கூழைக்கடா, மண்டை உள்ளான், கொசு உள்ளான், நிலக்கல் உள்ளான் வகை பறவைகள் வந்து குவிந்துள்ளது. இந்தப் பறவைகள் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் உள்ள நண்டுபள்ளம், சிறுதலைக்காடு, நெடுந்தீவு, கோவை தீவு போன்ற பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது

இந்த ஆண்டு பருவ மழை அதிகமாக பெய்ததால் ரஷ்யாவில் இருந்து சிறிய வகை பறவையான லிட்டில்சென்ட்(கொசு உள்ளான்) என்ற பறவை லட்சக்கணக்கில் வழக்கத்தைவிட அதிகமாக வந்து குவிந்துள்ளது.

இந்த பறவைகள் சுமார் 15 கிராம் முதல் 25 கிராம் எடை உடையதாகவும், மிகச்சிறிய பறவையாகவும் காணப்படுகிறது. இந்த பறவைகள் ரஷ்யாவில் இருந்து கோடியக்கரைக்கு இடைவிடாது பறந்து வந்துள்ளன.

இந்த சிறிய பறவைகள் கூட்டம், கூட்டமாக லட்சக்கணக்கில் நின்று தண்ணீரில் புழு, பூச்சிகளை உண்பது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

இதேபோல் லிட்டில்சென்ட் பறவைகள் லட்சக்கணக்கில் வந்து குவிந்துள்ளதால் சுற்றுலா பயணிகளும், பறவை ஆர்வலர்களும் பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சீசன் முடிவடையும் நேரம் வந்து விட்டதால் இந்த சிறிய வகை பறவைகள் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் அதிக அளவில் காணப்படும் லார்வா புழு பூச்சிகளைத் தின்று தங்களது உடலில் கொழுப்பு சத்து நிறைந்த உடன் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்புவதற்கு தங்களை தயார்படுத்தி வருகிறது.

இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த பறவைகள் தங்கள் சொந்த நாட்டுக்்கு திரும்பி விடும் என பறவை ஆராய்ச்சியாளர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்றும்(17-ந் தேதி) நாளையும் (18-ந் தேதி) பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும் என கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.

Similar News