செய்திகள்
நந்தினி

முதன்முறையாக சட்டப்படிப்பு முடித்த தோடர் இன இளம்பெண்

Published On 2021-02-17 09:03 IST   |   Update On 2021-02-17 09:03:00 IST
முதன்முறையாக சட்டப்படிப்பு முடித்த தோடர் இன இளம்பெண் நீலகிரி கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளை ஒட்டி தோடர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சமீபகாலமாக அவர்களது குழந்தைகள் கல்வி பயின்று முன்னேறி வருவதை காண முடிகிறது. அதன் ஒரு பகுதியாக தோடர் இனத்தில் முதல் முறையாக இளம்பெண் ஒருவர் சட்ட படிப்பை முடித்து உள்ளார்.

ஊட்டி அருகே தவிட்டுகோடு மந்து பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரது மகள் நந்தினி சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் கடந்த 2019-ம் ஆண்டு சட்ட படிப்பை முடித்தார். அவர் சென்னை பார் கவுன்சிலில் வக்கீல் பயிற்சி பெற பதிவு செய்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று அவர் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை நேரில் சந்தித்து சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இதுகுறித்து நந்தினி கூறும்போது, நான் பள்ளி படிப்பை ஊட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் முடித்தேன். பின்னர் சென்னையில் சட்ட படிப்பை நிறைவு செய்தேன். தோடர் இன மக்களில் முதல் முறையாக சட்டம் படித்து வக்கீலாக பணிபுரிய உள்ளேன். இதன்மூலம் சமூக மக்களுக்கு உதவி புரிவேன் என்றார்.

Similar News