செய்திகள்
போராட்டம்

பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 6-வது நாளாக போராட்டம்

Published On 2021-02-10 11:42 IST   |   Update On 2021-02-10 11:42:00 IST
கல்வி கட்டணத்தை குறைக்கக்கோரி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் போக்குவரத்து துறையின் கீழ் செயல்பட்டு வந்த மருத்துவ கல்லூரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவ கல்லூரியாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையாகவும், தற்போது கொரோனா சிறப்பு மருத்துவமனையாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் அரசு மருத்துவ கல்லூரியாக அறிவிக்கப்பட்டும் தனியார் மருத்துவ கல்லூரியில் வசூலிக்கும் கல்வி கட்டணமான 4 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், அரசு கல்லூரியில் வசூலிக்கும் 13 ஆயிரத்து 600 ரூபாயை கல்லூரி நிர்வாகம் வசூலிக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் அவர்களது பெற்றோர்கள் தொடர்ந்து தமிழக அரசிடம் கோரிக்கையை முன்வைத்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதல் 2 நாட்கள் கல்லூரி நுழைவாயில் முன்பு மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து கலெக்டர் கதிரவன், தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ ஆகியோர் போராட்டம் நடத்திய மாணவ மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உங்களது கோரிக்கை அரசிடம் எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதையடுத்து மாணவ-மாணவிகள் கல்லூரி ஆடிட்டோரியத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களது போராட்டம் இன்று 6-வது நாளாக நீடித்து வருகிறது. இன்றும் ஆடிட்டோரியத்தில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News