செய்திகள்
மாமரங்கள் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன

மாமரங்களில் அதிகளவு பூக்கள் பூத்துக்குலுங்குவதால் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு

Published On 2021-02-09 12:17 IST   |   Update On 2021-02-09 12:17:00 IST
இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்துள்ளதாலும் மாமரங்களில் அதிகளவு பூக்கள் பூத்துள்ளதாலும் வெயில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ராஜபாளையம்:

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு பருவமழை வெளுத்து வாங்கியதால் அணைகள் அனைத்தும் நிரம்பியது.

காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சியளிக்கிறது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் மாமரங்களில் இந்த ஆண்டு இலைகளே தெரியாத அளவுக்கு பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

இது பார்வைக்கு அழகாக இருந்தாலும் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்கான அறிகுறி இது என்று விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ராஜபாளையத்தைச் சேர்ந்த மூத்த விவசாயி ராமச்சந்திர ராஜா என்பவர் கூறியதாவது:-

மங்கும் காலம் மாங்காய், பொங்கும் காலம் புளியங்காய். மங்கும் காலத்தில் அதிகளவு மாமரங்களில் பூக்கள் பூத்துள்ளதால் இந்த ஆண்டு அதிக அளவு வெயில் இருக்கும்.

10 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் மாமரங்கள் பூத்துக் குலுங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த ஆண்டும் பருவமழை நன்றாக பெய்துள்ளதாலும் அதிகளவு பூக்கள் பூத்துள்ளதாலும் வெயில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News