செய்திகள்
முத்தரசன்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்- முத்தரசன் வலியுறுத்தல்

Published On 2021-01-28 06:49 GMT   |   Update On 2021-01-28 06:49 GMT
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என முத்தரசன் கூறினார்.
ராஜபாளையம்:

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அந்த கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தலைமை தாங்கினார்.

இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் லிங்கம், அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, நகர செயலாளர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

டெல்லியில் நடைபெற்ற பேரணியில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியது கண்டனத்துக்குரியது.

டெல்லியில் நடைபெற்ற டிராக்டர் பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அவர்களுக்கு ஆதரவாக டிராக்டர் பேரணி நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். அதேபோல போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அவ்வாறு தவறினால் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News