செய்திகள்
கங்கைகொண்ட சோழபுரம் கோவில் வளாகத்தில் ஆளில்லா விமானம் மூலம் ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்ட காட்சி.

கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆளில்லா விமானம் மூலம் அகழ்வாராய்ச்சிக்கான பணி தொடங்கியது

Published On 2021-01-23 09:32 GMT   |   Update On 2021-01-23 09:32 GMT
கங்கைகொண்ட சோழபுரம் பகுதியில் ஆளில்லா விமானம் மூலம் அகழ்வாராய்ச்சிக்கான பணி தொடங்கியது.
மீன்சுருட்டி:

கட்டிட கலைக்கு சிறந்து எடுத்துக்காட்டாகவும், புகழ்பெற்ற வழிபாட்டு தலமாகவும் விளங்குவது, கங்கை கொண்ட சோழபுரம். இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

கீழடியை போன்று வரலாற்று சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரத்திலும் அகழ்வாராய்ச்சி பணி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் அகழ்வாராய்ச்சிக்கான பணி நேற்று தொடங்கியது. தமிழ்நாடு தொல்லியல் துறையினர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதற்கட்டமாக ஆளில்லா சிறிய ரக விமானத்தின் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள பொன்னேரி, மாளிகைமேடு உள்ளிட்ட 18 கிலோ மீட்டர் தொலைவில் சென்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் கூறுகையில், தமிழகம் முழுவதும் 12 இடங்களில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 7 இடங்களில் ஆய்வுப்பணி மேற்கொள்ளப்படுகிறது. அந்த வரிசையில் ஏற்கனவே கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் அகழாய்வுப் பணிகள் தொடங்கி விட்டது. தற்போது கங்கைகொண்ட சோழபுரத்தில் அகழாய்வுப் பணிகள் நடைபெறுவதற்கான இடங்களை தேர்வு செய்வதற்காக இன்று (அதாவது நேற்று) முதற்கட்ட ஆய்வுப்பணி தொடங்கியுள்ளது. இதில் கங்கை கொண்ட சோழபுரம், மாளிகைமேடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு முப்பரிமாண படங்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் திருவாரூர் பல்கலைக்கழகம் சார்ந்தவர்களை கொண்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டு, பின்னர் அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து அதன் பின்னர் முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். அப்போது தொல்லியல் அலுவலர்கள் பாக்கியலட்சுமி, பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News