செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே நகைக்கடை அதிபர் மகனிடம் 300 பவுன் நகைகள் வழிப்பறி
ஸ்ரீபெரும்புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோவை வழிமறித்து நகைக்கடை அதிபர் மகனிடம் 300 பவுன் நகைகளை வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகரில் நகை கடை நடத்தி வருபவர் மகேந்திர். ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம், பேரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறு கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை மகேந்திர் மகன் ஆசிஸ், கடையில் வேலை செய்யும் ஊழியர் ராஜ்குமாருடன் ஆட்டோவில் திருவள்ளூரில் இருந்து சுங்குவார்சத்திரம் பகுதிக்கு சென்று நகைகளை விற்பனை செய்தார். திருவள்ளூர் பகுதியை சேர்ந்த சேகர் ஆட்டோவை ஓட்டி சென்றார். பின்னர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கடைகளுக்கு நகைகளை வினியோகம் செய்ய சென்றனர்.
அப்போது ஆட்டோ ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் அருகே வந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ஆட்டோவை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி ஆசிஸ் வைத்திருந்த 300 பவுன் தங்க நகைகள் வைத்திருந்த பையை பறித்தனர்.
இதையடுத்து அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இது குறித்து மகேந்திர் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்தார். ஸ்ரீபெரும்புதூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.