செய்திகள்
ஆண்டிமடம் அருகே வயல்களில் சூழ்ந்துள்ள மழைநீரில் அமர்ந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
ஆண்டிமடம் அருகே வடிகால் ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி வயல்களில் சூழ்ந்துள்ள மழைநீரில் அமர்ந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே ஓலையூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் மரவள்ளி கிழங்கு, கரும்பு, நெல், உளுந்து ஆகியவை பயிரிடப்பட்டுள்ளது. ‘புரெவி‘ புயல் காரணமாக அரியலூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஓலையூர் அருகே உள்ள அழகாபுரம் பெரிய ஏரி நிரம்பி, அங்கிருந்து உபரிநீர் வெளியேறி வருகிறது. ஏரி நீர் வெளியேற வேண்டிய வடிகால் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஏரியில் இருந்து வெளியேறிய வெள்ள நீர் ஓலையூர் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பாய்ந்து வருகிறது. இதையடுத்து சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளி கிழங்கு, கரும்பு, உளுந்து, முந்திரி, நெல் ஆகிய பயிர்களில் தொடர்ந்து 5 நாட்களாக இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது. இதனால் இந்த பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடம் ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையான வடிகால் வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத்து வந்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தொடர்ந்து இந்த ஆண்டும் வெள்ளநீர் விவசாய நிலங்களில் புகுந்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விவசாய பயிர்கள் நாசம் ஆகிவிட்டதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் வடிகால் ஓடையை ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாயத்தை காக்க வலியுறுத்தி தங்களது வயல்களில் சூழ்ந்துள்ள மழைநீரில் அமர்ந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓலையூர் கிராம நிர்வாக அதிகாரி கோட்டி, சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் விவசாயிகள் வடிகால் ஓடையை சீரமைத்து, இந்த ஆண்டு நடந்தது போல் மீண்டும் விவசாய நிலத்திற்குள் வெள்ளநீர் வராதபடி ஆவண செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கோட்டி, மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலட்சுமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசங்கர், ஒன்றிய பொறியாளர் வசந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் அழகாபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகமும், ஓலையூர் ஊராட்சி மன்ற நிர்வாகமும் இணைந்து அழகாபுரம் பெரிய ஏரிக்கான வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீரமைத்து தருவதாக உத்தரவாதம் கொடுத்தனர். இதையடுத்து காலை முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.