செய்திகள்
கலெக்டர் அருண்

முறைப்படுத்தப்படாத வைப்பு திட்டங்களில் சேர்ந்து ஏமாற வேண்டாம்- கலெக்டர் எச்சரிக்கை

Published On 2020-11-21 06:37 GMT   |   Update On 2020-11-21 06:37 GMT
முறைப்படுத்தப்படாத வைப்பு திட்டங்களில் சேர்ந்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று கலெக்டர் அருண் எச்சரித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை கலெக்டர் அருண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முறைப்படுத்தப்படாத வைப்பு திட்டங்களை தடை செய்வது தொடர்பான சட்டம் இந்திய அரசால் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இதுபோன்ற சட்ட விரோத வைப்பு திட்டங்களால் ஏமாற்றப்படுவதில் இருந்து தடுத்து பொதுமக்களின் பணத்தை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.

இந்த சட்டம் தற்போதுள்ள மாநில வைப்பு தொகையாளர்களின் உரிமை பாதுகாப்பு சட்டங்களின் சிறந்த நடை முறைகளை பின்பற்றுகிறது. மேலும் இச்சட்டத்தின் மூலம் மோசடி நபர்களின் முறைப் படுத்தப்படாத வைப்பு திட்டங்களை தடை செய்ய முடியும்.

இச்சட்டத்தின்படி முறைப்படுத்தப்படாத வைப்பு திட்டங்களுக்கு 2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு. ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கலாம்.

முறைப்படுத்தப்படாத வைப்பு திட்டங்கள் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட சார்பு, துணை மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கலாம். எனவே பொதுமக்கள் அனைவரும் அரசிடம் அனுமதி பெறாத முறைப்படுத்தப்படாத எந்த வைப்பு திட்டத்திலும் சேர்ந்து ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News