செய்திகள்
பர்கூர் மலைப்பகுதியில் தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கும் கார்

பர்கூர் மலைப்பகுதியில் கார் கவிழ்ந்து 4 தொழிலாளர்கள் பலி- 11 பேர் படுகாயம்

Published On 2020-11-09 07:11 IST   |   Update On 2020-11-09 07:19:00 IST
பர்கூர் மலைப்பகுதியில் கார் தலைகுப்புற கவிழ்ந்ததில் 4 தொழிலாளர்கள் பலியாகினர். இந்த விபத்தில் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.
அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மலையின் தம்முரெட்டி மலைக்கிராமத்தை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளர்கள் சிக்கப்பன் (வயது 40), தேவராஜ் (45), தொட்டப்பி (35), ஜோகன் (35), ஜோகி (45), போலன் (45) உள்பட 14 பேர் அந்தியூரை அடுத்த வட்டக்காடு பகுதிக்கு விவசாய வேலைக்காக நேற்று காலை புறப்பட்டனர். இதற்காக தம்முரெட்டியை சேர்ந்த மாதேவன் (42) என்பவரின் காரில் வட்டக்காடுக்கு சென்றனர்.

பர்கூரை அடுத்த மணியாச்சி பள்ளம் அருகே ஒரு கொண்டை ஊசி வளைவில் சென்றபோது திரும்ப முடியாமல் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய கார் ரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி சிக்கப்பன், தேவராஜ், தொட்டப்பி, ஜோகன் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

டிரைவர் மாதேவன் உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அங்கு ரோந்து வந்த வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே கார் டிரைவர் மாதேவன், சித்தலிங்கம் (45) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

Similar News