செய்திகள்
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
பவானிசாகர்:
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை பவானிசாகர் அணை ஆகும். இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணை தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 96.29 அடியாக இருந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 344 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று மாலை 3 மணிக்கு அணையின் தண்ணீர் வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 566 கன அடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 96.63 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்படுகிறது. அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.