செய்திகள்
முதல்-அமைச்சர் நாராயணசாமி

தமிழக பகுதிக்கு விரைவில் பஸ் போக்குவரத்து அதிகாரிகளுடன் நாராயணசாமி ஆலோசனை

Published On 2020-09-27 06:39 GMT   |   Update On 2020-09-27 06:39 GMT
புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு பஸ் போக்குவரத்தை தொடங்குவது தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி:

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் கடும் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டன. இதில் அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து சில நிபந்தனைகளுடன் கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் திறக்கப்பட்டன.

புதுவையில் இன்னும் தனியார் பஸ் போக்குவரத்து, தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. ஆனால் நகர் பகுதியில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசு சார்பில் சில பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் பஸ் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் பஸ்களுக்கான சாலைவரியை தள்ளுபடி செய்ய வேண்டும், முழு அளவில் பயணிகள் பயணிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை பஸ்களை இயக்கப்போவதில்லை என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்துக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் புதுவையில் பஸ் போக்குவரத்து முழுமையாக இயக்கப்படாததால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

நகர் பகுதியில் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும் புதுவை அரசு பஸ்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத அளவுக்கு பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். கிராமப் பகுதிகளில் பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று வர முடியாத நிலையும் இருந்து வருகிறது. இதனால் தனியார் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு சென்று வர முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்தநிலையில் பஸ்களை இயக்குவது தொடர்பாக சட்டமன்ற கமிட்டி அறையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜகான், செயலாளர் சரண், ஆணையர் சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது புதுவையில் முழுமையாக அரசு மற்றும் தனியார் பஸ்களை இயக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அக்டோபர் 1-ந்தேதி முதல் தனியார் பஸ்களை இயக்க பஸ் உரிமையாளர்கள் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதுவரை காத்திருக்காமல் விரைவிலேயே தனியார் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டார். தமிழக பகுதிக்கு பஸ்களை இயக்குவது குறித்து ஏற்கனவே தனியார் பஸ் உரிமையாளர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
Tags:    

Similar News