செய்திகள்
வங்கி கணக்கு

மதுரையிலும் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் மோசடி- 6000 பேரின் வங்கி கணக்கு முடக்கம்

Published On 2020-09-08 02:29 GMT   |   Update On 2020-09-08 02:59 GMT
மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் 16 ஆயிரம் பேர் போலியாக சேர்ந்து மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதில் 6 ஆயிரம் பேர் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மதுரை:

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த திட்டத்தின் கீழ் சுமார் 48 லட்சம் பேர் பதிவு செய்து பயன் அடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் விவசாயிகள் அல்லாதவர்களும் பதிவு செய்து நிதி உதவி பெறுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த திட்டத்தில் மதுரையிலும் மோசடி நடந்திருப்பதாக புகார்கள் எழுந்து உள்ளது. அதாவது விவசாயிகள் அல்லாதவர்கள், ஒரே குடும்பத்தில் அப்பா, அம்மா, மகன், மருமகள் என 4 பேரும் நிதி உதவி பெறுவது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளின் உண்மை தன்மையை கண்டறியும்படி கலெக்டர் வினய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தற்போது வேளாண் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் 16 ஆயிரம் பேர் போலி கணக்கு மூலம் நிதி உதவி பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 6 ஆயிரம் பேரின் வங்கி கணக்கில் இருந்து சுமார் ரூ.70 லட்சம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவர்களது வங்கி கணக்கும் முடக்கப்பட்டது.

இதற்கிடையில் இந்த திட்டத்தின் முறைகேடு குறித்து முழு அளவில் விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சி வலியுறுத்தி உள்ளது. இது குறித்து அந்த கட்சியின் விவசாய அணி மாநில செயலாளர் மணிமுத்தையா மற்றும் அந்த கட்சி நிர்வாகிகள் கலெக்டர் வினயை நேற்று சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தை சிலர் குறுக்கு வழியில் மோசடி செய்து இந்த நிதியை விவசாயிகள் அல்லாதோர் பெற்று உள்ளனர். இது மிகப்பெரிய குற்றமாகும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் குறித்து தமிழக அரசு முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். விவசாயிகள் அல்லாதவர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்குவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதே போல் உண்மையான விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் உண்மையான விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News