செய்திகள்
மரக்கட்டைகளை கொண்டு தற்காலிக பாலம் அமைத்து உள்ளதை படத்தில் காணலாம்.

கிராம மக்களின் வசதிக்காக மரக்கட்டைகளால் தற்காலிக பாலம் அமைப்பு

Published On 2020-08-14 07:59 GMT   |   Update On 2020-08-14 07:59 GMT
கூடலூர் அருகே வெள்ளத்தில் பாலம் உடைந்ததால், கிராம மக்களின் வசதிக்காக மரக்கட்டைகளை கொண்டு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
கூடலூர்:

கூடலூர் தாலுகா பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் கனமழை பெய்தது. இதனால் பாடந்தொரை, புளியம்பாறா உள்பட பல இடங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதேபோல் புளியம்பாறாவில் இருந்து கோழிகொல்லி, கத்தரிதோடு, மட்டம் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் ஆற்று வெள்ளத்தால் உடைந்தது. இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாலத்தை கடக்க முடியாததால், வெளியே செல்ல முடியாமல் தவித்தனர்.

இந்த நிலையில் கூடலூர் பகுதியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று முன்தினம் வெள்ள சேதங்கள் ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது பாலம் உடைந்ததால், புதிய பாலம் கட்டும் வரை, அங்கு தற்காலிக பாலம் அமைக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து நெல்லியாளம் நகராட்சி அதிகாரிகள், உடைந்த பாலத்தின் மீது மரக்கட்டைகளை கொண்டு தற்காலிக பாலத்தை நேற்று அமைத்தனர். இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, உடைந்த பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் கட்டும்போது அகலமாகவும், உயரமாகவும் கட்ட வேண்டும். அப்போதுதான் வெள்ளப்பாதிப்பால் பாலம் சேதம் அடையாது என்றனர்.
Tags:    

Similar News