செய்திகள்
குதிரை மீது பயணம் செய்து கணேஷ் எம்எல்ஏ நூதன போராட்டம் நடத்திய காட்சி.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- எம்எல்ஏ நூதன போராட்டம்

Published On 2020-06-30 11:13 GMT   |   Update On 2020-06-30 11:13 GMT
ஊட்டி, கூடலூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் எம்.எல்.ஏ. நூதன போராட்டம் நடத்தினார்.
ஊட்டி:

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் அலுவலங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஊட்டியில் உள்ள நீலகிரி கோட்ட தபால் நிலைய கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கணேஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஊரடங்கு காலத்தில் இதுபோன்ற விலை உயர்வு மக்களை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கும். எனவே விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் ரவிக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பழங்காலத்தில் இருந்ததைபோல் குதிரைகள் மீது அல்லது சைக்கிள்களில் செல்ல நேரிடும் என்று கணேஷ் எம்.எல்.ஏ. கூறினார். பின்னர் அவர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி ஊட்டி காந்தல் முக்கோணத்தில் இருந்து படகு இல்லம் வரை சாலையில் குதிரை மீது அமர்ந்து சென்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். எம்.எல்.ஏ.வுடன் கட்சி நிர்வாகிகளும் குதிரைகளில் சென்றனர்.

இதேபோன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கட்சி நிர்வாகிகள் ராஜூ, சி.கே.ராஜ், அம்சா, சளிவயல் ஷாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் பந்தலூரிலும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News