செய்திகள்
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

நடைமுறையில் உள்ள திட்டங்களை தடுக்கிறார்- கவர்னர் கிரண்பேடி மீது அமைச்சர் குற்றச்சாட்டு

Published On 2020-06-27 07:10 GMT   |   Update On 2020-06-27 07:10 GMT
நடைமுறையில் உள்ள திட்டங்களை செயல்படுத்த கவர்னர் கிரண்பேடி தடுக்கிறார் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றம் சாட்டினார்.
புதுச்சேரி:

புதுவை அமைச்சர் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு மார்ச் 25-ந்தேதி முதல் கொரோனா ஊரடங்கால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியவுடன் நிவாரணம் வழங்க திட்டமிட்டு அதற்கு கோப்பு தயார் செய்து ஏப்ரல் மாதம் தலைமை செயலருக்கு அனுப்பி வைத்தோம். முதல்கட்டமாக புதுவை, ஏனாமிற்கு சேர்ந்து வழங்கவும், காரைக்கால், மாகிக்கு தனித்தனியே வழங்கவும் கோப்பு தயாரித்து அனுப்பப்பட்டது. அந்த கோப்பில் மொத்தம் 19 ஆயிரத்து 100 மீனவர்கள் தடைக்கால நிவாரணம் பெறுகின்றனர். இவர்களுக்கு ரூ.12 கோடியே 6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் தலைமை செயலருக்கு சென்ற கோப்பை கவர்னர் கிரண்பேடி வேண்டுமென்றே தலையிட்டு ஓய்வூதியம் பெறுபவர்கள், மஞ்சள் நிற ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார். இது நடைமுறையில் உள்ள திட்டம் என்பதால் இந்த கோப்பு கவர்னரிடம் செல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் கவர்னர் கிரண்பேடி வேண்டுமென்றே தலையிட்டு 4 முறை பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி திருப்பி, திருப்பி அனுப்பி வைத்துள்ளார். மேலும் வீடு, வீடாக சென்று மீனவர்களை பற்றி ஆய்வு செய்ய அறிவுறுத்தினார்.

அப்போது நாங்கள் கொரோனா காலத்தில் ஆய்வு செய்வது சரியாக இருக்காது என்று தெரிவித்தோம். இந்த கருத்தை தலைமை செயலரும், கவர்னரிடம் தெரிவித்தார். இதற்கிடையே எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் முதல்-அமைச்சரை சந்தித்து மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தினார்கள். அப்போது நடைமுறையில் உள்ள மீனவ சங்க உறுப்பினர்களுக்கான சேமிப்பு நிதியையும் வழங்க வேண்டும் என கூறியிருந்தோம். அந்த கோப்பையும் கவர்னர் கிரண்பேடி பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி திருப்பி அனுப்பி விட்டார். அவரை சந்திக்க அனுமதி கேட்டபோதும் அனுமதி வழங்கவில்லை. ஆனால் தடைக்கால நிவாரணம் வழங்கும்படி கவர்னர் உத்தரவிட்டதற்கான கோப்பு இதுவரை எங்களுக்கு வரவில்லை.

இந்தநிலையில் புதுவை மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்று பிரதமர், மத்திய உள்துறை மந்திரி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் புதுவை கவர்னர் கிரண்பேடி நடைமுறையில் உள்ள திட்டங்களை தடுக்கிறார். பிரதமரை விட கவர்னர் உயர்ந்தவரா? புயல் காலத்திற்கான சேமிப்பு நிதியை வழங்க மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கி விட்டது. ஆனால் கவர்னர் கிரண்பேடி அதை வழங்க மறுக்கிறார். மீனவர்கள் புதுவை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை. கவர்னரை எதிர்த்து போராட்டம் நடத்துகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News