செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுக்கோட்டையில் மாரடைப்பால் இறந்தவருக்கு கொரோனா தொற்று

Published On 2020-06-24 16:35 IST   |   Update On 2020-06-24 16:35:00 IST
புதுக்கோட்டையில் மாரடைப்பால் இறந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள கோல்டன் நகரை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் கடந்த 21-ந் தேதி அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவரது சளி மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மாரடைப்பால் அவர் இறந்தார். அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதையடுத்து அவரது உடலை நகராட்சி நிர்வாகத்தினர் தகுந்த பாதுகாப்போடு அடக்கம் செய்தனர். மேலும் அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கொரோனா தொற்று உறுதியின் காரணமாக அவரது குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு சளி, ரத்தம் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலியாகி இருந்தார். கொரோனா பாதித்த 54 வயதுடைய நபர் ராணியார் அரசு மருத்துவமனையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோல்டன் நகர் முதியவர் கொரோனா பாதிப்பால் இறக்கவில்லை எனவும், மாரடைப்பால் இறந்ததாகவும் மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவித்தனர். கொரோனா பாதித்தவர்களின் பட்டியல் நேற்று வெளியானதில் திருமயத்தை சேர்ந்த 63 வயதுடைய முதியவர் ஒருவருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. மேலும் 2 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். 

Similar News