செய்திகள்
கொரோனா வைரஸ்

ஈரோட்டில் கொரோனா பாதிப்பு 72 ஆக உயர்வு

Published On 2020-05-30 09:58 GMT   |   Update On 2020-05-30 09:58 GMT
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 72 ஆக உயர்ந்து உள்ளது. சென்னையில் இருந்து வந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை தொடர்ந்து அவர் வசித்து வந்த வீடு தனிமைப்படுத்தப்பட்டது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 70 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் இறந்தார். மற்ற 69 பேர் குணமாகி வீடு திரும்பினார்கள். இதனால் ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலத்திற்கு மாறியது.

இந்த நிலையில் மீண்டும் ஈரோட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கவுந்தப்பாடியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு வந்த 40 வயதுடையவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் மகாராஷ்டிரத்தில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து அங்கிருந்து கொடுமுடி வந்து இருந்தார்.

தற்போது அவர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் ஈரோடு சூளை பகுதியை சேர்ந்த 35 வயது பெண் சென்னையில் வேலை பார்த்து வந்தார். ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதால் சொந்த ஊரான ஈரோடு திரும்ப அவர் நேற்று விமானம் மூலம் சேலம் வந்தார். அங்கு அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவர் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தற்போது பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொடுமுடியை சேர்ந்தவர் மற்றும் சூளையை சேர்ந்த பெண் ஆகிய 2 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 72 ஆக உயர்ந்து உள்ளது. மகாராஷ்டிரத்தில் இருந்து கொடுமுடி வந்தவர் மாநில அளவில் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. அதனையும் சேர்த்தால் ஈரோட்டில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 73 ஆக உயரும்.

சென்னையில் இருந்து வந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை தொடர்ந்து அவர் வசித்து வந்த வீடு தனிமைப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், மகன், உறவினர் உள்பட 4 பேரை தனிமையில் இருக்குமாறு சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-

சென்னையில் இருந்து அப்பெண் வந்த 3 மணி நேரத்தில் அவரை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். மேலும் அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அப்பகுதியில் 5 வீடுகளில் வசித்து வருபர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News