செய்திகள்
மரணம்

சிதம்பரத்தில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற வாலிபர் மரணம்

Published On 2020-04-04 07:27 GMT   |   Update On 2020-04-04 07:27 GMT
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள உழுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (வயது 29). ஐ.டி.ஐ. படித்துள்ள இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி, இருமல், காய்ச்சல் என திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கருதி உடனே சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் உள்ள தனிவார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், உயர் ரத்த அழுத்தம் அதிகரித்ததால் லட்சுமி நாராயணன் இறந்துள்ளார் என்று கூறினர்.

ஆனால், லட்சுமி நாராயணனின் தாய் மாலதி கூறுகையில், டாக்டர்கள் சரிவர கவனிக்காததால் எனது மகனுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டது என்றார்.

இருப்பினும் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், கொரோனா பாதித்த உடலை தங்களது ஊருக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து ஊர் பெரியவர்கள் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்தினர். சமரத்துக்கு பின்னர் லட்சுமி நாராயணின் உடல் ஊருக்குள் அனுமதிக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடந்தது.
Tags:    

Similar News