செய்திகள்
கொரோனா வைரஸ்

கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியருக்கு கொரோனா பாதிப்பு?

Published On 2020-03-24 13:53 IST   |   Update On 2020-03-24 13:53:00 IST
கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகம் அடைந்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கூடுதல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாமல்லபுரம்:

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஊழியராக வேலை பார்க்கும் 24 வயது வாலிபர் கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் சளியால் அவதிப்பட்டார். இதையடுத்து அவரை கல்பாக்கம் அணுசக்தித்துறை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகம் அடைந்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கூடுதல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை தனிமைப்படுத்தி முழு பரிசோதனை செய்து வருகிறார்கள். பரிசோதனை முடிவு வந்த பின்னரே அவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உள்ளதா என்பது தெரிய வரும்.

இதற்கிடையே அவரது குடும்பத்தினரை பாதுகாப்பு நடவடிக்கையாக 14 நாட்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த தகவலை அணுசக்கி மருத்துவ பிரிவு தலைவர் பட்டாச்சார்ஜி தமிழக சுகாதாரப் பணிகள் இணை இயக்குனருக்கு அனுப்பியுள்ளார்.

இதனால் கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அணுசக்தி நகரிய குடியிருப்புக்குள் வெளிநபர்கள் மற்றும் வெளி வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. அனைத்து கேட்டுகளும் மூடப்பட்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Similar News