செய்திகள்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் வாசல் பூட்டப்பட்டு உள்ளதால் பக்தர்கள் வெளியில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

சிதம்பரம் நடராஜர்- மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை

Published On 2020-03-20 10:19 GMT   |   Update On 2020-03-20 10:19 GMT
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசின் உத்தரவின் பேரில் இன்று முதல் வருகிற 31-ந்தேதி வரை சிதம்பரம் நடராஜர், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம்:

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்து வருகிறது. தினமும் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகிறார்கள்.

இந்தியாவிலும் கொரோனா வைரசுக்கு இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரசை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பொது மக்கள் கூடும் சுற்றுலா மையங்கள் மூடப்பட்டது.

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், டாஸ்மாக் பார்களை வருகிற 31-ந் தேதி வரை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநில மக்களும் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய 4 வாசல் வழியாக கோவிலுக்குள் சென்று வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய சன்னதிகளில் உள்ள வாசல்கள் வழியாக பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அங்கு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தது. கிழக்கு வாசல் வழியாக மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று முதல் வருகிற 31-ந்தேதி வரை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் வெங்கடேஷ் கூறும்போது, உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் பூலோகம், வைலோகம் என்றழைக்கப்படுகிறது. இங்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. பொதுமக்கள் நலன் கருதியும், உலக நன்மையை வேண்டியும் இந்த கோவிலில் நாங்கள் பிரார்த்தனை செய்து வருகிறோம்.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கோவிலில் 6 கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் 4 வாசல்களின் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதுபோல் சிதம்பரத்தில் உள்ள தில்லை காளியம்மன் கோவிலிலும் இன்று முதல் 31-ந்தேதி வரை பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வழக்கம்போல் கோவிலில் அனைத்து பூஜைகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இன்று முதல் வருகிற 31-ந் தேதி வரை சாமிதரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கலெக்டர் அண்ணாதுரை விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசின் உத்தரவின் பேரில் இன்று முதல் வருகிற 31-ந்தேதி வரை அங்காளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுகிறது. ஆனால், கோவிலில் அனைத்து பூஜைகளும் வழக்கம்போல் நடக்கும் என்றார்.

புதுவை மாநிலம் திருநள்ளாறில் சனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலும் இன்று முதல் 31-ந் தேதி வரை பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News