செய்திகள்
துணை கலெக்டர் தினகரன்

வேலூர் துணை கலெக்டரின் 5 வங்கி கணக்கு முடக்கம்

Published On 2020-03-03 13:20 IST   |   Update On 2020-03-03 17:13:00 IST
வேலூர் தனித்துணை கலெக்டர் தினகரனின் 5 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வாங்கிய சொத்துக்கள் குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் முத்திரைத்தாள் தனித்துணை கலெக்டர் தினகரன். இவர் போளூர் அருகே உள்ள இரும்புலி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்ற விவசாயியிடம் அவரது பத்திரத்தை விடுவிக்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதுபற்றி ரஞ்சித்குமார் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

கடந்த 27-ந் தேதி இரவு வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே காரில் இருந்தபடி ரஞ்சித்குமாரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை கலெக்டர் தினகரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர்.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அவருடைய அறையில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பணம் சிக்கியது. மேலும் காட்பாடி அருகே உள்ள தாங்கல் கிராமத்தில் உள்ள துணை கலெக்டர் தினகரன் வீட்டில் சோதனை செய்தனர்.

அங்கு இருந்த டிரங்க் பெட்டியில் கட்டு கட்டாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பணம் சிக்கியது. மொத்தம் ரூ.79 லட்சத்து 9 ஆயிரத்து 200 பறிமுதல் செய்தனர்.

மேலும் போளூரில் உள்ள அவரது வீட்டில் நடந்த சோதனையில் அவர் வாங்கிக் குவித்துள்ள சொத்து ஆவணங்கள் சிக்கின. அவற்றையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் துணை கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்களிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.



தினகரன் 5 வங்கிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளார். அதில் பல லட்சம் பணம் இருப்பதாக தெரிகிறது. இந்த வங்கி கணக்குகளை முடக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

மேலும் தினகரன் வாங்கிய சொத்துக்கள் குறித்தும் ஆய்வு செய்துவருகின்றனர். வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகங்களில் இதுதொடர்பான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.

தினகரன் கடந்த 2018-ம் ஆண்டு வேலூர் முத்திரைத்தாள் தனித்துணை கலெக்டராக பதவி உயர்வு பெற்று பணிக்கு வந்தார். அவர் பணியில் சேர்ந்த நாள் முதலே லஞ்சம் வாங்குவதில் கை தேர்ந்தவராக செயல்பட்டுள்ளார்.

இதற்காக அவர் முன்கூட்டியே கார் ஒன்றை வாங்கி அதற்கு தனியாக ரமேஷ் குமார் என்பவரை டிரைவராக நியமித்தார். காலையில் காரில் வெளியே செல்லும் தினகரன் மாலையில்தான் அலுவலகத்திற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

குறிப்பாக அவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகளவில் காரில் சென்று வந்துள்ளார். அலுவலகத்திலும் அல்லது மற்ற இடங்களிலும் இருந்து லஞ்சம் வாங்கினால் எளிதில் சிக்கவைத்து விடுவார்கள் என்பதால் காரில் இருந்தபடியே லஞ்சப் பணம் வசூல் செய்துள்ளார். 2 ஆண்டுகளில் அவர் கோடிக்கணக்கிலான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.

குவித்து வைத்த லஞ்ச பணத்தில் பெண், மது உள்ளிட்ட உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார்.

தினகரனை சஸ்பெண்டு செய்வதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.

துணை கலெக்டர் தினகரனுக்கு உதவியவர்கள் யார்? என்பது குறித்தும் ரகசியமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனால் அவருக்கு உதவியாக இருந்த அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர். முழுமையான விசாரணைக்குப் பின்னர் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பலர் சிக்குவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Similar News