செய்திகள்
தங்கச்சிமடம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட கேன் குடிநீர் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் அனுமதியின்றி செயல்பட்ட 21 கேன் குடிநீர் ஆலைகளுக்கு சீல்

Published On 2020-03-03 10:16 IST   |   Update On 2020-03-03 10:16:00 IST
ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் அனுமதியின்றி செயல்பட்ட 21 கேன் குடிநீர் ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
காரைக்குடி:

தமிழகத்தில் அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 100-க்கும் மேற்பட்ட குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நகர் பகுதிகளில் கேன் குடிநீர் பயன்படுத்துவோர் கடும் அவதியடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் ஆலைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பொதுப்பணித்துறையின் உரிய அனுமதி பெறாமலும், உரிமம் காலாவதியானதன் அடிப்படையில் தங்கச்சி மடம், மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி, ராமநாதபுரம், கமுதி உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வந்த 10 கேன் குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கேன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தேவகோட்டை, தருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை நகர் பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 10 கேன் குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

குடிநீர் கேன் உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக குடிநீர் கேன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிலர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குடிநீர் கேனை அதிக விலைக்கு விற்று வருவதாக புகார்கள் வந்துள்ளன.

கேன் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் மீண்டும் மாநகராட்சி, நகராட்சிகள் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரை நாடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Similar News