செய்திகள்
சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.

திருமாவளவன் போஸ்டர் கிழிப்பு- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

Published On 2020-02-23 11:35 GMT   |   Update On 2020-02-23 11:35 GMT
ஜெயங்கொண்டம் அருகே திருமாவளவன் போஸ்டர்களை கிழித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம்:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் நேற்று மாலை குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தேசம் காப்போம் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி., கலந்து கொண்டார். இதில் பங்கேற் பதற்காக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் திரளாக சென்றனர்.

மேலும் இந்தபேரணிக்கு அழைப்பு விடுத்து திருமாவளவன் உருவப்படம் இடம் பெற்ற போஸ்டர்களை உதய நத்தம் கிராமம் முழுவதும் ஒட்டி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் அந்த போஸ்டர் மீது சாணி அடித்து திருமாவளவன் உருவப்படத்தை கிழித்து விட்டனர். இதைக்கண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆத்திரம் அடைந்தனர். பின்னர் பொதுக்குழு உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் இன்று காலை அணைக்கரை ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் உதயநத்தம் பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. தகவலறிந்த ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், பழுவூர் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.

பின்னர் போஸ்டரை அவமதிப்பு செய்த நபர்களை உடனே கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் உதயநத்தம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

Similar News