செய்திகள்
சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் கடந்த ஆண்டு 355 கிலோ தங்கம் பறிமுதல்

Published On 2020-02-12 07:08 GMT   |   Update On 2020-02-12 07:08 GMT
சென்னை விமான நிலையத்தில் கடந்த ஆண்டு மட்டும் ரூ.123 கோடி மதிப்புள்ள 355 கிலோ தங்கம் சிக்கி உள்ளது.
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் தங்க கடத்தல் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடத்தல்காரர்களை கைது செய்தும், தங்கத்தை பறிமுதல் செய்தும் வருகிறார்கள். எனினும் தங்க கடத்தல் நீடித்து வருகிறது.

கடந்த 2018-ம் ஆண்டைவிட கடந்த ஆண்டு (2019) சென்னை விமான நிலையத்தில் கூடுதல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் ரூ.123 கோடி மதிப்புள்ள 355 கிலோ தங்கம் சிக்கி உள்ளது. 2018-ம் ஆண்டு ரூ.72 கோடி மதிப்புள்ள 232 கிலோ தங்கம் பிடிபட்டு இருந்தது.

இதன்மூலம் கடந்த 2018-ம் ஆண்டைவிட 2019-ம் ஆண்டு 67 சதவீதம் கடத்தல் தங்கம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் தங்கம் கடத்தல் தொடர்பாக 2018-ம் ஆண்டு 389 வழக்குகளும், 2019-ம் ஆண்டு 841 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு மலேசியாவில் இருந்து கடத்தப்பட்ட ரூ.2.25 கோடி வைரங்களும் சிக்கி இருந்தது.

கடத்தல் தொடர்பிலும் கடந்த ஆண்டு 113 பேரும், 2018-ம் ஆண்டு 36 பேரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இதேபோல் 2018-ம் ஆண்டு ரூ.78 லட்சம் மதிப்புள்ள குங்குமப்பூவும், 2019-ம் ஆண்டு ரூ.1.4 கோடி மதிப்பிலான குங்குமப்பூவும் சிக்கி உள்ளது.

இது தொடர்பாக சுங்கத்துறை ஆணையர் ராஜன் சவுத்ரி கூறும்போது, “அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பால் அதிக அளவு கடத்தல் தங்கம் பிடிபட்டு உள்ளது.

கடத்தல்காரர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும் இன்பார்மர்கள் தொடர்பு நல்ல நிலையில் உள்ளது. அதிகாரிகள் கடத்தல் தங்கம் தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும்” என்றார்.
Tags:    

Similar News