செய்திகள்
பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் பெயரை மாற்றி அறிவித்த அதிகாரிகள்
கடலூரில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வெற்றி பெற்ற என்னை, அதிகாரிகள் பெயரை மாற்றி அறிவித்ததால் தனது கணவருடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கடலூர்:
கடலூர் யூனியனுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் ஓட்டு எண்ணிக்கை தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு பெரியார் கலைக் கல்லூரியில் நடந்தது.
குமளங்குளம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஜெயலட்சுமி என்பவர் ஆட்டோ ரிக்ஷா சின்னத்திலும், விஜயலட்சுமி பூட்டுசாவி சின்னத்திலும் போட்டியிட்டனர். மொத்தம் 4,139 ஓட்டுகள் பதிவானது. ஓட்டு எண்ணிக்கை முடிவில் ஜெயலட்சுமி 2,860 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வெற்றி சான்றிதழை ஜெயலட்சுமி வாங்குவதற்கு தேர்தல் அதிகாரியிடம் சென்றார். தேர்தல் அதிகாரிகள் ஜெயலட்சுமிக்கு வெற்றி சான்றிதழை வழங்கினர். ஆனால் அந்த சான்றிதழில் ஜெயலட்சுமிக்கு பதிலாக தோல்வி அடைந்த விஜயலட்சுமி பெயர் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி அதிகாரிகளிடம் சென்று முறையிட்டார். அப்போது தேர்தல் அதிகாரிகள் சான்றிதழ் வழங்கியது சரிதான் என்று தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
ஆத்திரமடைந்து ஜெயலட்சுமி கண்ணீர்மல்க ஓட்டு எண்ணிக்கை நடந்த அறை முன்பு தனது கணவருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பாபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
இதனிடையே பூட்டுசாவி சின்னத்தில் போட்டியிட்ட விஜயலட்சுமி எனது பெயரில் தான் நான் வெற்றிபெற்றதாக தேர்தல் அதிகாரிகள் சான்றிதழ் கொடுத்துள்ளனர். எனவே அந்த சான்றிதழை என்னிடம் வழங்கவேண்டும் என்று கூறி தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியல் செய்தார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. போலீசார் விரைந்து சென்று சாலை மறியல் செய்தவர்களை சமரச படுத்தினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.