செய்திகள்
தினகரன் கட்சி வேட்பாளரின் ஆதரவாளரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தென்னங்கன்றுகள்.

வாக்காளர்களுக்கு தென்னங்கன்று விநியோகம் செய்த வாலிபர் கைது

Published On 2019-12-25 09:51 IST   |   Update On 2019-12-25 09:51:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அ.ம.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு தென்னங்கன்று விநியோகம் செய்த வாலிபரை அதிகாரிகள் கைது செய்தனர்.
ஆலங்குடி:

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதி ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அ.ம.மு.க. சார்பில் ரமேஷ் என்பவர் போட்டியிடுகிறார். கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த அவர் இறுதிக்கட்ட பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

தென்னங்கன்று சின்னத்தில் போட்டியிடும் அவர் தென்னங்கன்றுகளை கையில் ஏந்திச்சென்று வாக்காளர்களை சந்தித்து ஓட்டு கேட்டார். இந்த நிலையில் வாக்காளர்களுக்கு வேட்பாளர் ரமேஷ் சார்பில் தென்னங்கன்றுகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து தேர்தல் அதிகாரி முருகேசன் தலைமையில் பிலாவிடுதி பகுதிக்கு சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் ஒருவர் வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு தென்னங்கன்றுகளை விநியோகித்து கொண்டு இருந்தார்.

உடனே அவரை மடக்கி பிடித்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அதே பகுதியை சேர்ந்த ஹரிகரன் (வயது 18) என்பதும், அ.ம.மு.க. வேட்பாளர் ரமேசுக்கு ஆதரவாக தென்னங்கன்றுகளை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ததும் தெரியவந்தது.

அவரிடம் இருந்து 100 தென்னங்கன்றுகளை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து போலீசில் ஒப்படைத்தனர். இதனிடையே அவர் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெறும் நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News