செய்திகள்
கோப்பு படம்

தேயிலை தூளில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை - உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை

Published On 2019-12-09 10:22 GMT   |   Update On 2019-12-09 10:22 GMT
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தூளில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தூளில் கலப்படம் செய்வது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி எச்சரித்துள்ளனர்.

இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் தங்க விக்னேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வகையான தேயிலை தூள், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன் கீழ் தரத்தினை உறுதி செய்யும் வகையில் கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் தேயிலை தூளில் கலப்படம் செய்வது கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் படி நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் தயாரிப்பாளர்கள், தேயிலை ஏல விற்பனை மையம், மறு பொட்டலமிடுவோர் மற்றும் மொத்த, சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் கண்டிப்பாக முழுமையான பொட்டல மிடுதல் மற்றும் சீட்டிடுதல் விதிகளை பின்பற்ற வேண்டும்.

மேலும், உணவு பொருளின் பெயர், உணவு பாதுகாப்பு உரிமம் எண், தயாரிப்பாளர், மறு பொட்டலமிடுவோர், விநியோகிஸ்தர் முழு அஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண், தயாரிப்பு மற்றும் பொட்டலமிடப்பட்ட தேதி , உபயோகப்படுத்துவதற்கான கால அளவு, நிகர எடை, தொகுப்பு எண், விலை, ஊட்டச்சத்து விவரம், சேர்மான பொருட்கள் விவரம், சைவ குறியீடு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த தகவல்கள் இல்லாமல் விற்கப்படும் தேயிலை தூள் பறிமுதல் செய்து கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி விற்பனை செய்வோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Tags:    

Similar News