செய்திகள்
தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் வேகமாக நிரம்பி வரும் வீராணம் ஏரி.

வேகமாக நிரம்பி வரும் வீராணம் ஏரி

Published On 2019-10-31 10:32 GMT   |   Update On 2019-10-31 10:32 GMT
கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதாலும், கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதாலும் வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.

இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாயநிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பப்படுகிறது.

கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வீராணம் ஏரியில் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்கிறது. அதோடு கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. நேற்று இரவும் விடிய விடிய பலத்தமழை நீடித்தது.

வடவாறு வழியாக 2 ஆயிரம் கன அடிநீர் ஏரிக்கு வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு 46.40 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 46.66 அடியாக உயர்ந்து உள்ளது. பாசனத்துக்கு 10 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு 60 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. தற்போது நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் 74 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

வீராணம் ஏரி நிரம்பும் நிலையில் உள்ளது. ஏரிக்கு தண்ணீர் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளதால் சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி செயற்பொறியாளர்கள் சிதம்பர குமார், கீழணை அருணகிரி மற்றும் உதவி பொறியாளர்கள், அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
Tags:    

Similar News