ஊட்டியில் பலத்த மழை: ரோட்டில் ராட்சத பாறை விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இடைவிடாது பெய்த கன மழையால் மஞ்சூர், குந்தாபாலம், கிண்ணக் கொரை, கோர குந்தா உள்ளிட்ட பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டதுடன் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மேலும் குந்தாபாலம், கெத்தை, ஒணிகண்டி உள்பட பல்வேறு இடங்களில் 10-க்கும் மேற்பட்ட விடகள் இடிந்து விழுந்தது. 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளின் முன், பின்புற பகுதிகளில் மண் சரிவுகள் மற்றும் தடுப்பு சுவர்கள் இடிந்து விழுந்தது.
குந்தா பாலம் பன்னிமேடு பகுதியை சேர்ந்த 20 குடும்பங்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மழையின் தாக்கம் படிப்படியாக குறைந்ததுடன் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் அடித்தது. இதனால் பொதுமக்கள் மத்தியில் இயல்பு வாழ்க்கை திரும்பியது.
இதற்கிடையே திடீரென கால நிலை மாற்றம் ஏற்பட்டதால் மஞ்சூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதல் கடும் மேக மூட்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காலை 11 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது.
சற்று நேரத்தில் பலத்த மழையாக மாறியது. விடு, விட்டு அரை மணி நேரத்திற்கு ஒரு முயை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. மீண்டும் பலத்த மழை தொடங்கி உள்ளதால் மஞ்சூர் சுற்றுப்புற பகுதி மக்களிடையே மண் சரிவு அச்சம் ஏற்பட்டு உள்ளது.
குன்னூர், எடப்பள்ளி, கட்டப்பெட்டு கோத்தகிரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இன்று கன மழை பெய்தது. ஒரு மணி நேரம் நீடித்த இந்த கன மழையால் ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக கோவை செல்லும் நெடுஞ்சாலையில் கட்டபெட்டு அருகே சாலையில் சீகை மரம் விழுந்தது. இதனை தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் வாள் கொண்டு அறுத்தும், கயிறு கட்டி இழுத்தும் அப்புறப்படுத்தினார்கள்.
இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னூரில் மேக மூட்டத்துடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. கடும் மேக மூட்டம் நிலவுவதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி சென்றது. மழை காரணமாக குன்னூர்- சேலாஸ் சாலையில் ராட்சத பாறைகள் நடு ரோட்டில் சரிந்து விழுந்தது. இதனை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர்.கடும் மேக மூட்டம் காணப்படுவதால் லாம்ஸ்ராக், டால்பின் நோஸ் உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் இயற்கை காட்சிகளை ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
ஊட்டியில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவி வருகிறது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
கோவையில் நேற்று காலை முதலே குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. பின்னர் மழை பெய்ய தொடங்கியது. இரவு மழை பெய்தது. கோவை காந்திபுரம், சாய்பாபா காலனி, சரவணம் பட்டி, கணபதி, ராமநாதபுரம், புலிய குளம், சிங்காநல்லூர், போத்தனூர், செல்வபுரம் உள்ளிட்ட மாநகர பகுதிகளிலும், சூலூர், கருமத்தம் பட்டி உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்தது.
மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அணைகளின் நீர் மட்டம் வருமாறு-
குந்தா-87, கெத்தை-152, எமரால்டு-152, அவலாஞ்சி- 169, அப்பர் பவானி- 207, பால்ஸன்ஸ்வேலி- 52, போர்த்தி மந்து- 116, பைக்காரா- 85, முக்கூருத்தி- 16, சாண்டிநல்லா-43, கிளன் மார்கன்-24, மாயார்-15.
திருப்பூர் மாவட்ட ம் உடுமலை பகுதியில் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.