செய்திகள்
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ஒரு ராட்சத மரம் விழுந்து மண்சரிவு ஏற்பட்டது

நீலகிரி மாவட்டத்தில் கனமழை - 54 இடங்களில் மண்சரிவு

Published On 2019-10-22 10:07 GMT   |   Update On 2019-10-22 10:07 GMT
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 54-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.

ஊட்டி உள்ளிட்ட இடங்களில் மழை குறைந்தும், குன்னூர், கோத்தகிரி, குந்தா ஆகிய பகுதிகளில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

தென்மேற்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து நீலகிரி மாவட்டம் இன்னும் முழுமையாக மீளாத நிலையில் தற்போது தொடங்கி உள்ள வடகிழக்கு பருவமழையால் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கோத்தகிரி மற்றும் மஞ்சூர் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் விளை நிலங்களில் வெள்ளம் சூழ்ந்தது. பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றி வருகிறார்கள்.

கனமழை காரணமாக நேற்று மாலை குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டேரி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குன்னூரில் ராணுவ முகாம் செல்லும் ஆரஞ்சு குரோவ் சாலையில் மண் சரிவு ஏற்பட்டதில் 3 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் காந்திபுரம் பகுதியில் மண் சரிவு, மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து தடைபட்டு 5 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றது. தீயணைப்பு துறையினர், போலீசார், நெடுஞ்சாலைத் துறையினர் இணைந்து மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சாலையில் மண் சரிந்து விழுந்ததாலும், மரம் விழுந்ததாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டடதால் குன்னூர் நகரமே ஸ்தம்பித்தது.

ஊட்டியில் இருந்து பஸ்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

ஊட்டி காய்கறி சந்தையில் மழை நீர் புகுந்தது. இதனால் வியாபாரிகள் பாதிப்பு அடைந்தனர்.

குன்னூர் அருகே உள்ள கெந்தளா பகுதியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் கிடக்கும் ராட்சத பாறைகளை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் நேற்று இரவு மழை பெய்தது. இதனால் மஞ்சூர்- கோவை சாலையில் கெத்தை, பெரும் பள்ளம், மந்து உள்ளிட்ட 6 இடங்களில் இன்று அதிகாலை மண் சரிவு ஏற்பட்டது. மேலும் மரங்களும் ரோட்டில் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மண் சரிவு, சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்டத்தில் 54-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது.

குன்னூரில் நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக குன்னூர் அருகே உள்ள கொலகம்பை பாரதி நகரில் வசித்து வரும் பெரியசாமி, இளங்கோ, சண்முக ராஜா, பாட்டாயி, கந்தசாமி, பாலமுத்து, பாலு, மற்றும் பழனியம்மாள் உள்ளிட்ட 21 பேரின் வீடுகள் இடிந்து சேதம் அடைந்தது.

அவர்களை அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். சேதம் அடைந்த வீடுகளை கிராம நிர்வாக அலுவலர் பீரவீனா, ஆய்வாளர் மணி ஆகியோர் பார்வையிட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதனால் மாவட்டத்திற்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மழை காரணமாக குந்தா, அவலாஞ்சி, ரேலியா ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

ஊட்டி- 33, நடுவட்டம்- 56, கல்லட்டி-12, கிளன்மார்கன்-27, குந்தா-19,அவலாஞ்சி-27, எமரால்டு-17, கெத்தை- 11, கின்னகொரை - 11, அப்பர் பவானி-23, குன்னூர்-5, கேத்தி- 9, பர்லியார்- 5, கோத்தகிரி- 5.2, கொடநாடு- 39, கூடலூர்-48, தேவாலா- 59.

Tags:    

Similar News