செய்திகள்
தமிழக-கர்நாடக மாநில எல்லையான புளிஞ்சூர் சோதனை சாவடியில் வாகன ஓட்டிகள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.

தாளவாடி அருகே கர்நாடக மாநில எல்லையில் வாகன ஓட்டிகள் சாலை மறியல்

Published On 2019-09-26 09:56 IST   |   Update On 2019-09-26 09:56:00 IST
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கர்நாடக மாநில எல்லையில் சாலையை சீரமைக்க கோரி வாகன ஓட்டிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தாளவாடி:

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தமிழகம் - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை வழியாக 24 மணி நேரமும் பஸ் மற்றும் சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இருமாநில எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடி முதல் சிக்கொலா அணை வரை உள்ள 25 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையை கர்நாடக மாநில நெடுஞ்சாலைத்துறையினர் சரிவர பராமரிக்காமல் உள்ளதால் குண்டும் குழியுமாக மாறிவிட்டது.

வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தை இயக்குவதில் மிகுந்த சிரமம் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மழை பெய்துவருவதால் சாலை எது குழி எது என்று தெரியாமல் தினம் தினம் அவதி பட்டுவருவதாகவும் இதுகுறித்து சாம்ராஜ்நகர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் வாகன ஓட்டிகள் பல முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

சாம்ராஜ்நகர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் சுரேஷ் தலைமையில் மலைப்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் 100-க்கும் மேற்பட்டோர் தமிழக கர்நாடக மாநில சோதனைச்சாவடியான புளிஞ்சூர் சோதனைச் சாவடியில் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இருமாநில போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த சாம்ராஜ்நகர் மாவட்ட ஆய்வாளர் மஞ்சுநாத் தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

சாலையை சீராமைக்கவில்லை என்றால் வரும் திங்கள் அன்று 1000-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுடன் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் செய்யப்படும் என்றனர்.

மறியல் போராட்டம் காரணமாக தமிழக கர்நாடக இடையே ஒரு மணி நேரம் பேக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Similar News