செய்திகள்
ஈரோடு கலெக்டர் அலுவலகம் அருகே சட்ட நகலை எரித்த விவசாயிகள்.

உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு - ஈரோட்டில் சட்ட நகலை எரித்த 50 விவசாயிகள் கைது

Published On 2019-09-18 07:22 GMT   |   Update On 2019-09-18 07:22 GMT
விளைநிலம் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் சட்ட நகலை எரித்த 50 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:

தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், கரூர் ஆகிய 10 மாவட்டங்களில் பவர் டெக் நிறுவனமும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமும் இணைந்து உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாய விளைநிலங்களில் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் தொடங்கப்பட்டு அதன் மூலம் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்து வந்தன.

இருப்பினும் விவசாயிகள் போராட்டத்தையும் மீறி விவசாய நிலங்கள் வழியாக உயர் மீன் கோபுரங்கள் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

1885 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தந்தி கம்பங்கள் அமைக்கும் சட்டத்தின் அடிப்படையில் விவசாய விளைநிலங்களை வருவாய் துறையினர் கையகப்படுத்தி மின்வாரியத்திற்கு வழங்கி வருகின்றனர்.

எனவே இந்த தந்தி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) ஈரோடு, திருப்பூர், கோவை உள்பட 10 மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என்று உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதோடு போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் போராட்ட குழுவினர் சந்தித்தனர்.

ஈரோட்டில் இன்று கலெக்டர் அலுவலகம் முன்பு காலை 10 மணிக்கு தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு போலீசார் தடைவிதித்துள்ளனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்வோம் என்று போலீசார் தெரிவித்தனர் .

ஆனால் திட்டமிட்டபடி தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என்று போராட்டக் குழுவினர் அறிவித்தனர்.

இதனால் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் டவுன் டிஎஸ்பி ராஜு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

கலெக்டர் அலுவலகம் வந்ததும் விவசாயிகளை கைது செய்ய போலீசார் தயாராக இருந்தனர்.

இந்த நிலையில் கலெக்டர் அலுவலகம் அருகே பெருந்துறை ரோட்டில் வந்த விவசாயிகள் திடீரென சட்ட நகலை தீ வைத்து எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை கண்ட போலீசார் அங்கு ஓடி சென்று தீயை அணைத்து விவசாயிகளை கைது செய்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவரும், உயர்மின் கோபுர எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளருமான முனுசாமி தலைமையில் 50 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.




Tags:    

Similar News