செய்திகள்
லாரியை கவனிக்காமல் சைக்கிளில் சிறுவன் சென்றதையும், அவனை போலீஸ்காரர் இழுத்ததையும் காணலாம்

லாரியை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்ற சிறுவன் - காப்பாற்றிய போலீஸ்காரர்

Published On 2019-09-16 03:18 GMT   |   Update On 2019-09-16 03:18 GMT
பண்ருட்டியில் மின்னல் வேகத்தில் வந்த லாரியை கவனிக்காமல் சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற சிறுவனை போலீஸ்காரர் காப்பாற்றினார்.
பண்ருட்டி:

தமிழகத்தில் சாலை விபத்துகள் என்பது தொடர் கதையாகி வருகிறது. தினமும் ஏராளமான விபத்துகள் நடைபெறுகின்றன. இதில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. போக்குவரத்து அதிகமான பகுதியில் ஏற்படும் விபத்துகளை தடுக்க சிக்னல் அமைத்தும், போலீசாரை நியமித்தும் விபத்துகளை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மின்னல் வேகத்தில் வந்த லாரியை கவனிக்காமல் சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற சிறுவனை போக்குவரத்து போலீஸ்காரர் பிடித்து தனது பக்கம் இழுத்து அவனது உயிரை காப்பாற்றியுள்ளார். இந்த நெகிழ்ச்சி சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

பண்ருட்டியில் கும்பகோணம்-சென்னை சாலை, கடலூர்-சித்தூர் சாலை மற்றும் காந்தி மார்க்கெட் சாலை ஆகிய சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால், அங்கு போலீசார் பணியில் இருந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜதீபன்(வயது 32) என்ற போக்குவரத்து போலீஸ்காரர், அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி லாரி ஒன்று மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருந்தது. 5 முனை சந்திப்பில் வந்தபோது, அங்கு சைக்கிளில் வந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் திடீரென மார்க்கெட் சாலையில் இருந்து கடலூர் சாலையை கடக்க முயன்றான். இதைபார்த்த போலீஸ்காரர் ராஜதீபன், கண் இமைக்கும் நேரத்தில் அந்த சிறுவனை சைக்கிளுடன் பிடித்து தன் பக்கம் இழுத்துக்கொண்டார்.



ஒருவேளை அந்த போலீஸ்காரர் சிறுவனை சைக்கிளுடன் இழுக்காமல் இருந்திருந்தால், லாரி மோதி உயிர்சேதம் ஏற்படும் நிலை உருவாகியிருக்கும். இதையடுத்து அந்த சிறுவனை போலீஸ்காரர் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தார். சிறப்பாக செயல்பட்ட போலீஸ்காரரை அங்கிருந்தவர்கள் பாராட்டினர். இந்த வீடியோ காட்சி, பண்ருட்டி 5 முனை சந்திப்பில் உள்ள போக்குவரத்து சிக்னலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.

தற்போது அந்த வீடியோ வாட்ஸ்-அப், முகநூல்(பேஸ்புக்) போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. துரிதமாக செயல்பட்ட போலீஸ்காரர் ராஜதீபனை, பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சட்டப்பிரிவு வழக்கு பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் மற்றும் போலீசார் பாராட்டினர்.
Tags:    

Similar News