செய்திகள்
ஆயிரங்கால் மண்டபம் அலங்கரிக்கப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்.

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சஸ்பெண்டு

Published On 2019-09-14 06:36 GMT   |   Update On 2019-09-14 06:36 GMT
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடம்பர திருமணம் நடத்தப்பட்டது தொடர்பாக தீட்சிதர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் உலக பிரசித்திபெற்ற சைவ திருத்தலமாகும். அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர் ஆகிய நால்வரால் பாடப்பட்ட திருத்தலம் இது. பஞ்சபூதங்களில் ஆகாயதலம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியது.

இந்த கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் ராஜசபை என அழைக்கப்படுகிறது. இங்குதான் ஆடி திருமணம் நடைபெறும். மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தில் நடராஜர்-சிவகாம சுந்தரி அம்பாள் எழுந்தருள்வர்.

புகழ்பெற்ற இந்த ஆயிரங்கால் மண்டபத்தில் ஆகமவிதிப்படி திருமணம் உள்ளிட்ட வேறு எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதிப்பதில்லை. இந்த கோவிலில் உள்ள பாண்டியநாயகர் சன்னதியில்தான் திருமணம் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் கடந்த 11-ந் தேதி சிவகாசியை சேர்ந்த தொழில் அதிபர் இல்ல திருமண விழா ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்தது. இதற்காக மின்விளக்குகள், மலர் தோரணங்கள், வண்ண திரைசீலைகள் ஆகியவற்றால் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒட்டுமொத்தத்தில் நட்சத்திர விடுதியைபோல் ஆயிரங்கால் மண்டபம் ஜொலித்தது.

திருமணத்தையொட்டி கோவில் நுழைவுவாயில், நடராஜர் வீற்றிருக்கும் சித்சபை ஆகிய இடங்களில் பூ, மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது. திருமணம் நடந்த நாள் அன்று இந்த பகுதிக்குள் வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. திருமண பேட்ஜ் அணிந்துவந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ஆகம விதியை மீறி இந்த ஆடம்பர திருமணம் நடந்துள்ளது. இதனால் கோவிலின் புனிததன்மை கெட்டுள்ளது என்று பக்தர்கள் குற்றம் சாட்டினர். இந்த திருமணம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதுகுறித்து சிதம்பரம் நடராஜர்கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளர் பால கணேச தீட்சிதரிடம் கேட்டதற்கு அவர் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.

திருமண ஏற்பாடுகளை செய்த பட்டு தீட்சிதர் கூறுகையில் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்த திருமணத்தில் எந்தவித ஆகம விதிமீறல்கள் நடைபெறவில்லை என்றார். இந்த நிலையில் கோவில் டிரஸ்டிகள் அய்யப்பன் தீட்சிதர், சோமகார்த்தி தீட்சிதர், துணை செயலாளர் நவமணி தீட்சிதர் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் திருமண ஏற்பாடு செய்த பட்டு தீட்சிதர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.
Tags:    

Similar News