செய்திகள்
வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவைத்த அமைச்சர் எம்.சி.சம்பத் மலர் தூவியபோது எடுத்த படம்.

வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறப்பு

Published On 2019-09-11 04:42 GMT   |   Update On 2019-09-11 04:42 GMT
வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்காக இன்று காலை அமைச்சர் எம்.சி.சம்பத் தண்ணீர் திறந்து வைத்தார். ஏரியில் உள்ள 34 மதகுகளில் இருந்தும் வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரிஉள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.

இந்த ஏரியின் மூலம் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு முக்கிய நீர் ஆதாரமாக வீராணம் ஏரி உள்ளது.

கடந்த மாதம் கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்தன. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணை வந்தடைந்ததும் அங்கிருந்து கொள்ளிடத்தின் வழியாக கீழணைக்கு தண்ணீர் வந்தது.

கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டது. வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு திறந்து விடப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. அதன் பின்னர் சென்னைக்கு குடிநீருக்கு அனுப்பும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது.

கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 2,120 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.61 அடியாக இருந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி 47 அடியாக அதிகரித்தது. ஏரி நிரம்பியது. சென்னைக்கு தொடர்ந்து 46 கனஅடி குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.

வீராணம் ஏரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கவேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து இன்று காலை அமைச்சர் எம்.சி.சம்பத் வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து வைத்தார். ஏரியில் மலர் தூவினார். இதில் கலெக்டர் அன்புச்செல்வன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். வீராணம் ஏரியில் உள்ள 34 மதகுகளில் இருந்தும் வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன் மூலம் காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம் மற்றும் புவனகிரி தாலுகாக்களை சேர்ந்த 102 கிராமங்களில் மொத்தம் 44.856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

அந்த பகுதி விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் அவர்கள் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரை மலர்தூவி வரவேற்றனர்.
Tags:    

Similar News