செய்திகள்
கொள்ளை

காட்டுமன்னார்கோவிலில் பஸ்சில் தலைமை ஆசிரியையிடம் ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை

Published On 2019-09-05 04:15 GMT   |   Update On 2019-09-05 04:15 GMT
காட்டுமன்னார்கோவிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ்சில் தலைமை ஆசிரியையிடம் ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கொடிக்கால்தெருவை சேர்ந்த முத்துக்கருப்பன். இவரது மனைவி சாந்தி (வயது 51). இவர் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள மேலராதாம்பூரில் அரசு தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்த பள்ளியில் ரூ.8 லட்சம் மதிப்பில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டிட பணி பாதியில் நிற்கிறது. கட்டிடம் கட்ட பணம் இல்லாததால் சாந்தி தனது சொந்த பணத்தை வங்கியில் எடுக்க முடிவு செய்தார். நேற்று மதியம் அவர் காட்டுமன்னார்கோவில் சென்றார்.

அங்கு ஒரு வங்கியில் ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்து பையில் வைத்திருந்தார். ஸ்ரீமுஷ்ணம் செல்வதற்காக பஸ்நிலையத்தில் காத்திருந்தார். 3 மணி நேரம் ஆகியும் பஸ் வரவில்லை. அதன்பின்பு ஒரு பஸ் வந்தது. அதில் அங்கு நின்ற பயணிகள் அனைவரும் முண்டியடித்து பஸ்சில் ஏறினர். சாந்தியும் கூட்ட நெரிசலில் பஸ்சில் ஏறினார்.

பின்பு டிக்கெட் எடுப்பதற்காக சாந்தி பையை பார்த்தார். அப்போது பை திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே இருந்த ரூ.50 ஆயிரமும், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்லும் திருட்டுபோய் இருந்தது. உடனே அவர் கூச்சல் போட்டு அலறினார். அவரது அலறல் சத்தம்கேட்டு டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.

சாந்தி தன் பையில் வைத்திருந்த பணம் மற்றும் செல்போன் திருடுபோய் விட்டது என்றார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ அபேஸ் செய்துவிட்டது தெரியவந்தது.

பின்பு சாந்தி பஸ்சில் இருந்து இறங்கி காட்டுமன்னார் கோவில் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பஸ்சில் தலைமை ஆசிரியையிடம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதனை தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News