செய்திகள்
கடல்போல் காட்சியளிக்கும் வீராணம் ஏரி

வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46 அடியாக உயர்ந்தது

Published On 2019-08-31 04:48 GMT   |   Update On 2019-08-31 04:48 GMT
கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நேற்று 45.38 அடியாக இருந்த ஏரியின் நீர்மட்டம் இன்று 46 அடியாக உயர்ந்தது.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடியாகும்.

இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் தாகத்தை தீர்ப்பதிலும் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டதாலும் மழைபெய்யாததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 39 அடியாக குறைந்தது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெய்த மழையின் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த 13-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்து அடைந்ததும், அங்கிருந்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள கீழணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.

இன்று காலை வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக ஆயிரத்து 670 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. வீராணம் ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.38 அடியாக இருந்தது இன்று 46 அடியாக உயர்ந்தது. நீர் வரத்து இதுபோல் தொடர்ந்து அதிகரித்து வந்தால் நாளைக்குள் வீராணம் ஏரி நிரம்பி விடும். தற்போது வீராணம் ஏரி கடல்போல் காட்சியளிக்கிறது.

சென்னைக்கு குடிநீருக்காக கடந்த சிலநாட்களாக 25 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சென்னைக்கு இன்று 45 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. வீராணம் நிரம்பியபின்பு சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும்.
Tags:    

Similar News