செய்திகள்
முள் புதரில் கிடந்த கோவில் உண்டியல்

நெல்லிக்குப்பத்தில் பெரியாண்டவர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

Published On 2019-08-30 10:33 IST   |   Update On 2019-08-30 10:33:00 IST
நெல்லிக்குப்பத்தில் பெரியாண்டவர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லிக்குப்பம்:

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் மேல்பாதி பகுதியில் பிரசித்தி பெற்ற பெரியாண்டவர் கோவில் உள்ளது. இந்தகோவிலில் வருடந்தோறும் ஆடி மாதம் விமர்சையாக பூஜை நடப்பது வழக்கம்.

அதன்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறப்பாக பூஜை நடைபெற்றது. கோவிலில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் நேர்த்திகடனாக பொங்கல் வைத்து வழிபட்டனர். பக்தர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் காணிக்கை பணத்தை செலுத்தினர்.

நேற்று இரவு பூசாரி பூஜையை முடித்து விட்டு கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நள்ளிரவில் அங்கு வந்த மர்மமனிதர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்பு அவர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்தனர். அதில் இருந்த பணத்தை ஒரு பையில் அள்ளிபோட்டனர்.

அதன்பின்பு அவர்கள் அந்த உண்டியலை அருகில் உள்ள புதரில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டனர். உள்ளே சென்று பார்த்தபோது உண்டிலை காணவில்லை.

தகவல் அறிந்து ஊர் மக்கள் திரண்டு கோவிலுக்கு வந்தனர். பின்பு அவர்கள் அங்கு உள்ள புதரில் தேடிபார்த்தபோது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்தனர். இதுகுறித்து அவர்கள் நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இந்தகோவில் உண்டியல் நாளை மறுநாள் திறந்து பணம் எண்ணப்பட இருந்தது. அதற்குள் கொள்ளையர்கள் உண்டிலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

பெரியாண்டவர் கோவிலில் உண்டிலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News