செய்திகள்
கேஎஸ் அழகிரி

ப. சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசியதால் என் மீதும் நடவடிக்கை பாயலாம்- கேஎஸ் அழகிரி பேச்சு

Published On 2019-08-25 17:16 GMT   |   Update On 2019-08-25 17:16 GMT
ப.சிதம்பரம் கைதால் இந்தியாவில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. நான் சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசியதால் என் மீதும் நடவடிக்கை பாயலாம் என்று கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.

ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் செட்டித்தெருவில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசியதாவது:-

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தை பாரதீய ஜனதா அரசு பழி வாங்கும் நோக்கில் கைது செய்துள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். ப.சிதம்பரம் கைதால் இந்தியாவில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. நான் சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசியதால் என் மீதும் நடவடிக்கை பாயலாம்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தேனியில் மட்டும் முறைகேடு நடந்ததால் அந்த வெற்றி நழுவி போனது.

சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் மீது தவறான வதந்தியை பரப்பி வெற்றியை ஒருசிலர் தடுக்க முயன்றனர். ஆனால் அதனை மக்கள் நம்பாமல் அவரை அமோக வெற்றி பெற செய்தனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்த கூட்டணி சரியான கூட்டணி. அதனால்தான் இந்த வெற்றி கிடைத்தது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை மிகவும் கட்டுப்பாடான கட்சி. யார் தவறு செய்தாலும் கட்சியில் அனுமதிக்க மாட்டார்கள்.

ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது இளைஞர்கள் அனைவரும் வேலை வாய்ப்பை பெற்றனர். தற்போது பா.ஜனதா அரசில் இளைஞர்கள் வேலை இல்லாமல் திண்டாடுகிறார்கள்.

தொழிற்சாலைகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. பா.ஜனதா ஆட்சியில் பொருளாதாரம் சீரழிந்து பண தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல கார் கம்பெனிகள் நடத்த முடியாமல் திவாலாகி உள்ளது. இதனால் பல லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

ராகுல்காந்தி பிரதமராகி இருந்தால் தேர்தல் வாக்குறுதிபடி ஏழை மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்பட்டு இருக்கும். விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கும்.

தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜனதா எந்த காலத்திலும் காலூன்ற முடியாது. எதிர்காலத்திலும் தி.மு.க. கூட்டணியே அமோக வெற்றிபெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News