செய்திகள்
ரவுடி கோழிபாண்டியன்

சிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி ரவுடி படுகொலை- 2 வாலிபர்களுக்கு வலைவீச்சு

Published On 2019-08-21 12:25 GMT   |   Update On 2019-08-21 12:25 GMT
சிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் கலுங்குமேடு பகுதியை சேர்ந்தவர் கோழிபாண்டியன் (வயது 35). பிரபலரவுடி.

இவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலைபார்த்து வந்தார். நேற்று இரவு 11 மணி அளவில் கோழிபாண்டியன் மற்றும் அவரது நண்பர் மணிகண்டன் ஆகியோர் அண்ணாமலைநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர்.

அங்கு அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் ஓட்டலுக்கு வந்தனர். ஓட்டல் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே புகுந்தனர்.

பின்பு அவர்கள் அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்த கோழிபாண்டியன் மீது திடீரென்று மறைத்து வைத்திருந்த நாட்டு வெடி குண்டை எடுத்து வீசினர். இதில் குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

வெடிகுண்டு வெடித்ததில் கோழிபாண்டியன் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அப்போது அந்த வாலிபர்கள் அரிவாளால் சரமாரியாக கோழி பாண்டியனை வெட்டினர். இதில் துடிதுடித்து அவர் பரிதாபமாக இறந்தார்.

இதனைபார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் மணிகண்டன் மற்றும் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். வெடிகுண்டு வெடித்ததால் ஓட்டல் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனை பயன்படுத்தி கோலிபாண்டியை கொலை செய்த 2 வாலிபர்கர்களும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர்.

ஓட்டலில் வெடிகுண்டு வீசி ரவுடி கொலை செய்யப்பட்ட தகவல் சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஓட்டலில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்த கோழிபாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே ரவுடி கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட ரவுடி கோழிபாண்டியன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனால் அவருக்கும், வேறு சிலருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக அவர்கள் கோழிபாண்டியனை வெடிகுண்டு வீசி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதற்கிடையே தப்பி ஓடிய வாலிபர்களை பிடிக்க சிதம்பரம் துணைபோலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தனிப்படையினர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு வாகனங்களை மறித்து தீவிர சோதனை நடத்தினர். கொலையாளிகள் புதுவைக்கு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசில் ஒருபிரிவினர் இன்றுகாலை புதுவைக்கு சென்றுள்ளனர்.

ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட ரவுடி கோழிபாண்டியனுக்கு பிரியதர்ஷினி என்ற மனைவியும், அஸ்வின் (8) என்ற மகனும், அஸ்மிதா (9) என்ற மகனும் உள்ளனர்.

Tags:    

Similar News