செய்திகள்
மதுக்கடை கொள்ளை

கும்மிடிப்பூண்டி மதுக்கடை பூட்டை உடைத்து ரூ. 8½ லட்சம் கொள்ளை

Published On 2019-07-15 06:32 GMT   |   Update On 2019-07-15 06:32 GMT
கும்மிடிப்பூண்டி மதுக்கடை பூட்டை உடைத்து ரூ. 8½ லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி பஜார் ஏரிக்கரை பகுதியில் அரசு மதுபானக்கடை உள்ளது.

நேற்று அதிகாலை அந்த பகுதியில் ரோந்து சென்ற பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் கிருபாநந்தன், கடையின் இரும்பு கேட் மற்றும் இரும்பு ‌ஷட்டர் பூட்டுகள் கடப்பாரை கொண்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையின் உள்பக்கம் மின்விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன.

இதையடுத்து கடையின் மேற்பார்வையாளரான பெரியபாளையம் அடுத்த நெல்வாய் கிராமத்தைசேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு கும்மிடிப்பூண்டி போலீசார் தகவல் தெரிவித்தனர்.

அவர் கடைக்கு வந்து பார்த்த போது தரையோடு தரையாக உள்ள இரும்பு லாக்கரை உடைத்து அதில் இருந்த 3 நாள் வசூல் பணமான ரூ. 8 லட்சத்து 50 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது.

மேலும் கடையில் இருந்த உயர்ரக மதுபாட்டில்களையும் மர்ம ஆசாமிகள் அள்ளிச் சென்றனர்.

மதுபானக்கடையை கொள்ளையர்கள் உடைத்த போது அதன் அருகே படுத்திருந்த நாய் தொடர்ந்து குரைத்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், அந்த நாயை கடப்பாரையால் அடித்து கொன்றனர். இறந்த நாயை அருகில் உள்ள முட்புதரில் வீசிவிட்டு சென்றார்கள்.

கொள்ளையர்கள் அணிந்து வந்த காலணிகள் அதே பகுதியில் கிடப்பது கண்டறியப்பட்டது. கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கும்மிடிப்பூண்டி பகுதியில் தொடர்ந்து மதுபானக் கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. தற்போது 3-வதாக ஒரு மதுக்கடையில் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News