விருத்தாசலம் அருகே நள்ளிரவில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
விருத்தாச்சலம்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சென்னை நோக்கி நள்ளிரவு 12 மணி அளவில் அரசு பஸ் ஒன்று சென்றது. விருத்தாசலத்தில் பஸ் பயணிகளை இறக்கி விட்டுவிட்டு அங்கிருந்து மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டது.
விருத்தாசலம் பஸ் நிலையத்தின் அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வேகமாக வந்தனர். அவர்களுக்கு பஸ் வழி விடவில்லை எனக் கூறி பஸ்சின் டிரைவர் மற்றும் கண்டக்டரை திட்டினர்.
இதையடுத்து பஸ் விருத்தாசலம் எல்ஐ.சி அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தன. அந்த 3 மர்ம நபர்களும் அங்கு மறைந்து நின்று கொண்டு பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கற்களை வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். உடனே பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். மேலும் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பஸ் மீண்டும் சென்னை நோக்கிப் புறப்பட்டது. அரசு பஸ் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.